சங்கீதம் 76

1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.
5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
6 யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,
9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11 பொருத்தனைப்பண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.
12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.