13 தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.
14 சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம்பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜூவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.
15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
17 உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.
18 உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?
19 உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.
20 நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.
21 மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம் போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.